ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் உயிர் தப்பிய இளைஞரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில்,கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் அதிரடிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டு போராட்டக்காரர்களும் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில்,பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த போராட்டக்காரர் ஒருவர் பாதுகாப்புத்தரப்பினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஒரு சிவிலியன் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை போராட்டக்கள பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.