மகளை பறிகொடுத்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை – இளையராஜா

தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. 

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத வெளியான படம் தான் அன்னக்கிளி. 

இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இசைஞானி இளையராஜா. 

இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார்.

இவர் 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார். 

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில், இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாளையொட்டி இசைஞானி இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

“பிறந்தநாள் வாழ்த்துகளை நீங்கள்தான் எனக்கு சொல்கிறீர்களே தவிர, எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. ரசிகர்களுக்காகத் தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; எனக்கு அது இல்லை. நன்றி… வணக்கம்” என்று உருக்கமாக கூறினார்.