மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல். : 6 பெண்கள் உட்பட 12 பேர் கைது.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துமடு பாவக்கொடிசேனை பிரதேசத்தில் கசிப்பு விற்பனை செய்ததாக கூறப்படும் வீடு ஒன்றை நேற்று திங்கட்கிழமை (20) முற்றுகையிட்டு கசிப்பு வியாபாரியை கசிப்புடன் கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்தவர்கள் பொலிஸார் மீது மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த ஹப்புகாமி தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து நேற்று காலை 11 மணியளவில் குறித்த பிரதேசத்திலுள்ள குறித்த குறித்த வீட்டை முற்றுகையிட்டு அங்கு கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை 2 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரை ஜீப்பில் ஏற்றுவதற்கு பொலிஸார் முற்பட்டபோது குறித்த இளைஞரின் சகோதரி உட்பட்ட உறவினர்கள் கொண்ட குழுவினர் அவரை ஜீப்பில் ஏற்ற விடாது பொலிஸாரை தடுத்தனர்.

இதன்போது பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே இழுபறி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது குறித்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த நிலையில் அவரை பொலிஸார் சுற்றிவளைத்து மீண்டும் கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த இளைஞனை ஜீப் வண்டியில் ஏற்றிய நிலையில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதன் பின்னர் பொலிஸார் கடமையை செய்யவிடாது தடுத்த மற்றும் பொலிஸாரின் ஜீப் வண்டியை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 6 பெண்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.