மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று அதிகாலை இலங்கை போக்குவரத்து சபை பஸ் பாரிய விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இன்று அதிகாலை வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பஸ் ஊறணிச்சந்தியில் உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக வந்த குறித்த பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக பஸ்சின் முன்பக்கம் பகுதி கடுமையான சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.