மதுகுடித்ததை தட்டிக்கேட்ட தாயாரை கொலை செய்த மகன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுகுடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்ட தாயாரை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சக்கரமல்லூரைச் சேர்ந்த வாணிஸ்வரியின் கணவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட 2 மகன், ஒரு மகளை வளர்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

2 மகன்களும் காவலர் பணியில் சேர்ந்த நிலையில், 2வது மகன் தினேஷ், மதுபழக்கத்திற்கு அடிமையாகி பணிக்குச் செல்லாததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தினேசுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் சரிவர வேலைக்குச் செல்லாததை தட்டிக்கேட்ட மனைவியை கொலை செய்ய முயன்றதாகவும், அதனால், அவர் தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், போதையில் வந்த தினேஷ், தாயாருடன் சண்டையிட்டு அவரை கொலை செய்துவிட்டு, வீட்டின் முன்பு மது அருந்திய நிலையிலேயே அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக செல்போனில் இரவில் பேசும் தாயார் பேசாததால் திமிரியிலுள்ள அவரது மகள் பிரியா வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயார் இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்குச் சென்று விசாரணை நடத்தி தினேஷை கைது செய்தனர்.