மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கைக்கு விடுக்கும் வலியுறுத்தல்கள்.

இலங்கை அரசாங்கம் வருவாயை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தும் கொள்கைகள், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மேலும் சிதைக்காமல் இருப்பதையும், ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள், பொறுப்புக்கூறலை வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதி குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மேலும் கீழ்நோக்கி கொண்டு செல்லும் அபாயங்களைக் கட்டமைத்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம், அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் செல்வந்தர்களுக்கு நன்மை பயக்கும் பொருளாதார கொள்கைகளின் விளைவாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் வாழ்க்கையைச் சமாளிக்க போராடும் இலங்கையர்கள், சுமையை சுமக்க வேண்டியதில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

கடந்தகால போர்க்குற்றங்கள் அல்லது தற்போதைய தவறான நிர்வாகம் மற்றும் விமர்சகர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் எதுவாக இருந்தாலும், பொதுமக்கள் உண்மையான பொறுப்புக்கூறலுக்கு தகுதியானவர்கள் என்பதை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.

நெருக்கடி நிலைமைக்கு வழிவகுத்த, ஆழமான வேரூன்றிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதேவேளையில், குறைந்த வருமானம் கொண்ட மக்களின், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை குறைக்கும் கொள்கைகளை பின்பற்றுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத் திட்டத்தில் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிற நடவடிக்கைகள் உள்ளடங்கியுள்ளன.

இந்தநிலையில் நாணய நிதியத்தின் முக்கியமான நடவடிக்கைகள் உரிமைகளை அழிப்பதற்குப் பதிலாக நிறைவேற்றும் வகையில் மேற்கொள்ளப்படுவதைத் திட்டம் உறுதிப்படுத்தவில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.