மாத்தறையில் மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு

மாத்தறையில் தெனியாய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் 11 ஆம் தரத்தில் பயிலும் மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொஸ்மோதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவி நேற்று முன்தினம் மொரவக்க பிரதேசத்தில் பகுதி நேர வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கொட்டபொல வரல்ல பிரதேசத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோரால் முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட மாணவி பழடைந்த வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் முச்சக்கர வண்டியில் அழைத்து வரப்பட்டு வரல்ல பிரதேசத்தில் விட்டுச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து கொஸ்மோதர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.