‘மாயி’ பட இயக்குநர் மரணம்

இயக்குநர் சூர்யபிரகாஷ் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநர் சூர்யபிரகாஷ் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 57.

இவர் சரத்குமார் நடித்த ‘மாயி, திவான்’ ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார்.

ராஜ்கிரண் நடித்த ‘மாணிக்கம்’ படத்தையும் இயக்கி உள்ளார். ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தையும் இயக்கினார்.

தெலுங்கில் ராஜசேகர், மீனா நடித்த ‘பரத் சிம்ஹா ரெட்டி’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

கடைசியாக ‘வருச நாடு’ என்ற படத்தை டைரக்டு செய்தார்.

இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் மரணம் அடைந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யபிரகாஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வலைத்தளத்தில் சரத்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “எனது நடிப்பில் வெளியான ‘மாயி’, ‘திவான்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.