மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு. ;  இருவர் பலி.

காவல்துறை விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் , மினுவாங்கொடை பொல்வத்தை, பகுதியில் இன்று (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஊரகஹ பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றமை மற்றும் யக்கலமுல்ல பகுதியில் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி நான்கு வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் உந்துருளி செலுத்திய நபரையும் கைதுசெய்ய சென்ற போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி மேலதிக சிகிச்சைக்காக மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரும், தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலொன்றின் தலைவரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ஊரகஹ இந்திக்கவின் பிரதான உதவியாட்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் போத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடமிருந்து T-56 ரக துப்பாக்கியொன்றும், போர 12 துப்பாக்கியொன்றும், ரம்போ ரக கத்தி ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மினுவாங்கொடை காவல்துறையினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.