மியன்மார்  அரச படையினரின் வான்வழித் தாக்குதலில் 53 பேர் பலி

மியன்மாரில்  அரச படையினர் இன்று (11.4.2023 ) நடத்திய வான் வழித் தாக்குதலில் குறைந்தபட்சம் 53 பேர் உயிரிழந்துள்ளனர் என இத்தாக்குதலில் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில்குறைந்தபட்சம்  15 பெண்கள் மற்றும் சிறார்களும் அடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சாகெய்ங் பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பிராந்தியம் மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து வருகிறது.

அங்குள்ள மக்கள் தமது சொந்த ஆயுதக்குழுக்களை ஸ்தாபித்துள்ளதுடன், சுயமாக பாடசாலைகள் மற்றும் மருத்துவநிலையங்களையும் நடத்துகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இராணுவ விமானமொன்று  குண்டுவீசியதாகவும், பின்னர் ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிபிசியிடம் கிராமவாசி  ஒருவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் பாதுகாப்புப் படைகள் எனும் கிளர்ச்சிக்குழுவின் புதிய அலுவலகத்  திறப்பு வைபவத்தின்போது  இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.