முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பில் புதிய வர்த்தமானி

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் (Full face Helmet) தொடர்பான சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம் மோட்டார் சைக்கிள்களை செலுத்துபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகளுடன் புதிய வர்த்தமானி அறிவிப்பு (2287/28) வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 158 வது பிரிவின் கீழ், கடந்த மாதம் 7ஆம் திகதி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரால், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, மோட்டார் சைக்கிள் செலுத்துபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர், பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

இந்த தலைக்கவசங்கள், இலங்கை தரநிலை விவரக்குறிப்பின் B வகை பாதுகாப்பு தலைக்கவசங்கள் அல்லது பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அத்தகைய பாதுகாப்பு தலைக்கவசம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) வழங்கப்பட்ட தயாரிப்பு சான்றிதழ் (SLS) அடையாளத்தை கொண்டிருக்க வேண்டும்.

அவற்றின் வெளிப்புற மேற்பரப்பில் இருந்து ஒளி பிரதிபலிக்கக் கூடாது.

எவ்வாறாயினும், குற்றத்தடுப்பில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரி அல்லது இலங்கை இராணுவம், கடற்படை அல்லது விமானப்படை உறுப்பினர்களுக்கு மற்றும் தேசிய பாதுகாப்பில் பணி புரிவோருக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.