முதல் மிட் வீக் எவிக்ஷன் – வெளியேறிய போட்டியாளர்

பிக் பாஸ் சீசன் 7 கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது. ‘டைட்டில் வெல்லப் போவது யார்’, யாருக்கு இரண்டாவது இடம் என்பது இந்த வாரம் தெரிந்து விடும்.  

 அர்ச்சனா, மாயா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா ஆகிய ஆறு பேர் தற்போது களத்தில் நின்றபடி தங்களுக்காக ஓட்டு கேட்டு வருகிறார்கள். இப்போதைய நிலவரப்படி அர்ச்சனாவுக்கு டைட்டில் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாகத் தெரியவருகிறது. அர்ச்சனா டைட்டில் வென்றால், பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக டைட்டில் வென்ற வைல்டு கார்டு போட்டியாளர் எனற பெருமை அவருக்குக் கிடைக்கும்.

மேலும் அர்ச்சனாவுக்கு டைட்டில் கிடைத்தால் இரண்டாவது இடம் நிச்சயம் தினே{க்கு இருக்காது என்கிறார்கள். ஏனெனில் முதல் மற்றும் இரண்டாவது என அடுத்தடுத்த இடங்களில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் இருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.ஆனால், ஒரு சாராரோ ‘அதெல்லாம் இல்லீங்க, ஓட்டு கிடைச்சா, அதுப்படிதான் நடக்கும்’ என்றும் சொல்கிறார்கள்.

இந்நிலையில் இறுதிச் சுற்றில் நான்கு பேர் மட்டுமே இருப்பார்களெனவும் மீதி இரண்டு பேர் இந்த வாரத்தில் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறலாமெனவும் தகவல்கள் வெளியாகின.நம் சோர்ஸில் விசாரித்த போது அந்தத் தகவல் உண்மை எனத் தெரிய வருகிறது.தொடர்ந்து தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் உறுதிப்படுத்தப் பட்ட தகவலின் படி தற்போது நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் ஆகி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார் விஜய் வர்மா. சில படங்களில் சிறு பாத்திரங்களில் தலைகாட்டியிருக்கும் விஜய் வர்மாவைப் பொறுத்தவரை நிகழ்ச்சிக்குள் வந்த முதல் வாரத்திலேயே அந்த வீட்டின் கேப்டன் ஆனார்.

ஆனால் அடுத்தடுத்த அவரது செயல்பாடுகள் அவருக்குப் பின்னடைவைத் தந்தன. வார இறுதி எபிசோடில் கமலின் எச்சரிக்கைக்கும் ஆளானார். அடுத்த சில வாரங்களிலேயே நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியில் சென்றவரை மீண்டும் வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் அனுமதித்தார்கள்.

இரண்டாவது முறை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தவர் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட்டைத் தொடர்வதாகச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். அதுதான் இவர் வெளியேறியதற்கும் காரணம் என்கிறார்கள். ஆனாலும் இன்று எவிக்ட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த எபிசோட் நாளை ஒளிபரப்பாகலாம் என்கிறார்கள். இதையடுத்து இந்த வாரத்திலேயே மற்றுமொரு எவிக்சன் நடக்கலாம் எனவும் கூறுகிறார்கள்.