முன்னாள் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்.

முன்னாள் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.

நேற்று (12) இரவு வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனம் அடைந்ததை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவு வண்டி மூலம் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு, வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஆளுநரான ரெஜினோல்ட் குரோ, மேல் மாகாண முதலமைச்சராகவும் (2000 -2005) பதவி வகித்ததுடன், அமைச்சு பதவிகளையும் வகித்துள்ளார்.

அத்துடன், 2016 மாசி மாதம்  இவர் வட மாகாணத்தில் ஆளுனராகவும் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், சில காலம் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.