ஹைதராபாத், ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமையன்று (27) சாதனைகள் நிலைநாட்டப்பட்ட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸை 31 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றிகொண்டது.
பந்துவீச்சாளர்கள் சிதறடிக்கப்பட்ட அப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவித்த 277 ஓட்டங்கள் இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் அணி ஒன்று பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக அமைந்தது.
புனே வொரியர்ஸ் அணிக்கு எதிராக 2013இல் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் பெற்ற 5 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களே இதற்கு முன்னர் ஒரு அணியினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.
அத்துடன் இப் போட்டியில் இரண்டு அணிகளும் மொத்தமாக பெற்ற 523 ஓட்டங்கள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய ஒட்டுமொத்த எண்ணிக்கையாகும்.
முன்னைய சாதனை 14 வருடங்களுக்கு முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸும் ராஜஸ்தான் றோயல்ஸும் இணைந்து பெற்ற 469 ஓட்டங்களாகும்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மூவர் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 277 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது.
மயன்க் அகர்வால் மாத்திரமே (11) குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (45 – 1 விக்.)
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 22 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
2023 உலகக் கிண்ண நாயகன் ட்ரவிஸ் ஹெட் 24 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களை விளாசினார்.
மொத்த எண்ணிக்கை 161 ஓட்டங்களாக இருந்தபோது அபிஷேக் ஷர்மா ஆட்டம் இழந்தார். அவர் 23 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 63 ஓட்டங்களைக் குவித்தார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த தென் ஆபிரிக்கர்களான ஏய்டன் மார்க்ராம். ஹென்றிச் க்ளாசன் ஆகியோர் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 54 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 277 ஓட்டங்களாக உயர்த்தினர்.
ஹென்றிச் க்ளாசன் 34 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 80 ஓட்டங்களுடனும் ஏய்டன் மார்க்ராம் 28 பந்துகளில் 42 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
278 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களைக் குவித்து 31 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
மும்பை இண்டியன்ஸ் துடுப்பாட்ட வீரர்களும் சளைக்காமல் ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தனர். ஆனால். வெற்றி இலக்கு மிகப் பெரியதாக இருந்ததாலும் துடுப்பாட்ட வீரர்கள் அதரிடியில் இறங்கி அவசரத் துடுக்கையால் ஆட்டம் இழந்ததாலும் மும்பை இண்டியன்ஸ் தோல்வியைத் தழுவியது.
இஷான் கிஷான் 13 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 34 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரோஹித் ஷர்மாவுடன் முதலாவது விக்கெட்டில் 20 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
200ஆவது ஐபிஎல் போட்டியில் 200 என்ற இலக்க ஷேர்ட்டுடன் விளையாடிய அந்த ஷேர்டை சச்சின் டெண்டுல்கர் வழங்கிவைத்தார்.
தொடர்ந்து நாமன் திர், திலக் வர்மா ஆகிய இருவரும் எதிரணி பந்துவீச்சாளர்களை சிதறடித்து 3ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
நாமன் திர் 14 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
திலக் வர்மா 34 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 64 ஓட்டங்களைக் குவித்து மொத்த எண்ணிக்கை 182 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தார்.
அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் அவரிடம் வழமையான அதிரடி காணப்படவில்லை.
கடைசி இரண்டு ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 43 ஒட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகிய இருவரும் 22 ஓட்டங்களையே பெற்றனர்.
டிம் டேவிட் 22 பந்துகளில் 42 ஓட்டங்களுடனும் ரொமாரியோ ஷெப்பர்ட் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜெய்தேவ் உனந்த்காட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.