மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் சு.துரைசிங்கம் காலமானார்.

ஈழத்து இலக்கிய வானில் ஒளிவீசிய மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் சு.துரைசிங்கம் நேற்று புதன்கிழமை தனது 83 ஆவது வயதில் காலமானார்.  

1939ஆம் ஆண்டு கந்தரோடை, சுன்னாகத்தில் பிறந்த இவர் கவிதை, சிறுவர் இலக்கியம், பக்தி இலக்கியம், ஆய்வு ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வந்துள்ளார்.

ஆசிரியராக, அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் வலம்புரி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தனது பதினாறாவது வயதில் முதல் எழுதிய கவிதையுடன் இலக்கிய உலகில் பிரவேசித்த இவரது கவிதைகளை தொகுத்து ‘தெருவிளக்கு’ நூலினை 1972இல் வெளியிட்டார்.  

‘ஐம்பது நாடுகளை அறியுங்கள்’, ’46 நாடுகளை அறியுங்கள்’, ‘பண் சுமந்த பாடல்’ (கீர்த்தனைகள்), ‘சுன்னாகத்தில் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள்’, ‘அரும் பண்பாட்டுக் கோலங்கள்’, ‘ஆடும் மயில்’, ‘வயல் செய்வோம்’, ‘பாலன் வருகிறான்’, ‘பாலர் கணிதம்’ ஆகிய நூல்களையும், ‘கவிக்குரல்கள்’ (ஒலி நாடா), ‘அம்மன் கவசம்’ (ஒலிநாடா), ‘இந்து தர்மத்தில் பத்துகள்’ (காணொளி இறுவட்டு) ஆகியவற்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இளம் எழுத்தாளர் சங்கம், கந்தரோடை கலா நிலையம், சுன்னாகம் கலை இலக்கியச் சங்கம் ஆகியவற்றின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கிய இவர் பல்வேறு பொது அமைப்புகளிலும் இணைந்து செயற்பட்டவராவார்.

கலாபூஷணம், இசைப் பாவலர், ஞான ஏந்தல், சாமஸ்ரீ முதலான பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.  

அன்னாரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம், ஸ்ரேசன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.