யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்.நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிறுமி , கிளிநொச்சி பகுதியில் வைத்து கிளிநொச்சி காவல்துறையினரால் மீட்கப்பட்டு, கிளிநொச்சி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதேவேளை, தமது முறைப்பாடு தொடர்பில் யாழ் காவல்துறையினர் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும், தமது பகுதிக்கு அண்மையில் வசிக்கும் இளைஞர் குழு ஒன்றினால் தமக்கு தொடர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அது தொடர்பிலும் காவல்துறைனருக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என சிறுமியின் உறவினர்கள் வடமாகாண ஆளூநர் அலுவலகத்திலும் முறையிட்டு இருந்தனர்.
அதனை அடுத்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ் காவல்துறையினர் சிறுமியின் உறவினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்து யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.