யாழில் தந்தையை கொலை செய்த மகன்கள்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் நேற்று (31) காலை கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், கொலையாளிகளை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் இரண்டு மகன்களும், அவர்களுடைய நண்பரும் சேர்ந்தே இக்கொலையை செய்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் முதலாவது மகன் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், அவரிடம் விசாரணைகளை மேற்க்கொண்ட பொலிஸார் வெட்டுக்காயம் எவ்வாறு ஏற்பட்டது என வினவினர். நேற்று நள்ளிரவு தமது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் தந்தை இருக்கும் இடத்தை காட்டுமாறு தெரிவித்து தன்னை வாளால் வெட்டியதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை ஏன் பொலிஸாருக்கு தெரிவிக்கவில்லை என பொலிஸார் குறுக்கு விசாரணை செய்த போது, காலையில் பொலிஸாருக்கு தெரிந்துவிடும் என நம்பியதாக கொலை செய்யப்பட்டவரின் மூத்த மகன் தெரிவித்தார்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்டவரின் இரண்டாவது மகனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இக்கொலையின் உண்மைத்தன்மை வெளிவந்தது.

தாமே தந்தையை கொலை செய்ததாக இரண்டாவது மகன் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கினார். தானும், தனது மூத்த சகோதரனும் மற்றும் தங்களுடைய நண்பர் ஒருவரும் சேர்ந்தே இக்கொலையை செய்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு 1.30 மணியளவில் தந்தை தங்கி இருக்கும் தோட்டத்தில் உள்ள குடிலுக்கு ரகசியமாக சென்றதாகவும், தந்தையின் கழுத்தில் முதலில் தனது சகோதரனே வெட்டியதாகவும் பின்பு தாங்கள் இருவரும் வெட்டிக் கொலை செய்ததாகவும் கொலை செய்யப்பட்டவரின் இரண்டாவது மகன் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கினார்.

இந்நிலையில், கொலையாளிகளான கொலை செய்யப்பட்டவரின் 19 வயதுடைய மூத்த மகன், 18 வயதுடைய இரண்டாவது மகன், அவர்களுடைய நண்பரான 19 வயதுடைய இளைஞன் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.