யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது!

வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் எனும் குற்றச்சாட்டில் , யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைப் பொலிஸார்  நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சூழல் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும்  இருவர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக  கடந்த சில நாட்களாகப் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையிலேயே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு  வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அம் மாணவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.