யுவதி ஒருவரை கடத்திய இருவர் கைது

மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கடத்தி காரில் அழைத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் தோல்வியினால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக நேற்றிரவு (12) கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்ட யுவதி தன்னஹேன யக்வத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் கண்டுபிடிக்கப்பட்டு சினவத்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.