ராதா வான்படை உறுப்பினரின் சாட்சியத்தை நிராகரித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

14 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகளை வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டுத் தடுப்பு காவலில் இருந்த யாழ். வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், குறித்த மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் விடுவித்து, இன்றைய தினம் (03.04.2023) அவர்களை விடுதலை செய்துள்ளார்.

2009 தை மாதம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக இவர்களுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் அரச சாட்சியாக மாறி இம் மூவருக்கும் எதிராக நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.

“தான் பலாத்காரமான முறையில் சேர்த்து கொள்ளப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் எனவும் ராதா வான்படை பிரிவில் பயிற்சி செய்ததாகவும் கேர்ணல் சால்சிடம், புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றதாகவும் (17.5.2009) விடுதலைப்புலி சீருடையுன் தான் இருந்தததாகவும் தன்மை பற்றி கூறி இம் மூன்று அரசியல் கைதிகள் தொடர்பில் சாட்சியம் அளித்ததார்.”

குறிக்கப்பட்ட சாட்சி குற்ற உடந்தையாளி இவருக்கு சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்யவில்லை சட்டமா அதிபர் மன்னிப்பும் வழங்கவில்லை. ஆனால் அரச சாட்சியென பெயரிடப்பட்டார் இவரது சாட்சியம் நம்பகத்தன்மையற்றது என மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மூன்று அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தார்.

குறித்த மூன்று அரசியல் கைதிகள் தொடர்பில் மன்றில் முன்னிலையாகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் கருத்து தெரிவிக்கையில், கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விளக்கமறியலிலும், தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்த இ. திருவருள் (வயது 45), ம.சுலக்சன் (வயது 34), க. தர்சன் (வயது 33) ஆகியோர் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14 வருடங்களாக இவர்கள் தடுப்பு காவலிலும், விளக்கமறியலிலும் இருந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசம் இளஞ்செழியன் அவர்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டிய குற்றம் இவர்களுக்கு எதிராகச் சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்தது.

அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. அந்த சாட்சியங்கள் இவர்களது குற்றத்தை நிரூபிப்பதற்கு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை.

இதன் காரணமான அனைத்து குற்றங்களிலும் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். மிக நீண்டகாலம் இருந்த அரசியல் கைதிகளின் வழக்காக இது காணப்படுகின்றது. உண்மையில் இவர்களது விடுதலை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலை செய்யப்பட்ட மூவரும், நீதிமன்றம் முன்பாக வருகை தந்திருந்த தமது குடும்பத்தினருடனும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரடனும் கட்டியணைந்து தமது மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்தியதுடன் தமது விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.