வடக்கின் போர் ; யாழ் மத்திய கல்லூரி வெற்றி

‘வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 116ஆவது கிரிக்கெட் போட்டியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு இனிங்ஸ்களாக நடைபெற்றது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு தமது முதலாம் இனிங்சிற்காக துடுப்பாடிய யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

153 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஃப்லோஒன் முறையில் இரண்டாம் இனிங்சிற்காக முதலில் துடுப்பாடுமாறு யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியை பணித்தது.

இதன்படி, தமது இரண்டாம் இனிங்ஸிற்காக துடுப்பாடிய பரியோவான் கல்லூரி 54 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில் 9 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி இரண்டாம் இனிங்ஸில் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஒரு விக்கெட்டை இழந்து இலக்கை அடைந்தது.