சிங்களவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் இராணுவத்தினரால் அடக்கப்படுகின்ற போது, ஜெனீவாவில் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று கூறும் எதிர்கட்சி தலைவர், தமிழ் மக்கள் அடக்கப்படுகின்ற போது அவ்வாறான கருத்தை வெளியிடவில்லை. என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே தமிழ் மக்கள், இந்த நாடாளுமன்றத்தை நம்பப்போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒன்றின் போது, மக்கள் மத்தியில் இருந்து இனவாதத்தை துடைத்தெறியும் கொள்கை உருவாகி அதன் மூலம் நாடாளுமன்றத்துக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரை இந்த நாடாளுமன்றத்தை தமிழ் மக்கள் நம்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்கட்சி தலைவரிடம் இருந்து புதிய மாற்றங்களை எதிர்பார்ப்பதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
இலங்கைக்கு வெளியில் எவரும் எதிரிகள் இல்லை.
நாடாளுமன்றத்தில் உள்ளவர்களின் முடிவுகள் காரணமாகவே நாடு இந்த நிலைக்கு சென்றுள்ளதால் நாடாளுமன்றில் உள்ளவர்களே மக்களின் எதிரிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய கஜேந்திரகுமார், வடக்கு கிழக்கில் வறுமை தொடர்பாக யாரும் கணக்கில் எடுப்பதில்லை என்று குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதார பின்னடைவுக்கு இராணுவ ஆக்கிரமிப்பு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் 14 குடிமக்களுக்கு ஒரு இராணுவ உறுப்பினர் என்ற அடிப்படையில் இராணுவத்தினரின் பிரசன்னம் உள்ளது.
இலங்கையில் உள்ள 20 இராணுவப்பிரிவுகளில் 16 பிரிவுகள் வடக்கில் உள்ளன. இதனை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
இந்த நிலையில் அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள வறுமையை கருத்திற்கொள்ளவில்லை. அங்கு கணவர்மாரை இழந்த 90 ஆயிரம் பெண்கள் உள்ளனர். என்பதையும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் மறுசீரமைப்புக்கள் பற்றி பேசிய சர்வதேச நாணய நிதியம், நாட்டில் இராணுவத்தின் மறுசீரமைப்புக்கு தொடர்பாக பேசவில்லை.
கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் மொத்த செலவீனத்தில் 19 வீதம் படையினருக்கு ஒதுக்கப்பட்டது. எனினும் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் 10 வீதம் அளவான ஒதுக்கீடுகளே மேற்கொள்ளப்பட்டன.
ரூபாவின் வீழ்ச்சிக்கு ஏற்ப அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் இன்னும் அதிக தொகை படையினருக்கு ஒதுக்கப்படும். இல்லையெனில் இராணுவத்தின் செலவுகளை கட்டுப்படுத்தமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே உண்மையான வறுமையில் உள்ள இலங்கையின் வடக்குகிழக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் உள்ளவர்களையும் கருத்திற்கொள்ளாமல், சிறிய தொகையினரை மாத்திரம் திருப்திப்படுத்தும் இந்த இடைக்கால வரவுசெலவுத்திட்டம் தோல்வியாகும் என்று அவர் தெரிவித்தார்.
இன்றைய ஜனாதிபதி பொதுமக்கள் ஆதரவு இன்றி பதவிக்கு வந்தவர்.
எனவே அவருக்கு பொதுமக்கள் சந்திக்க முடியாத நிலையில் இராணுவம் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் எதிரிகள் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் நிலை தொடரும்.
அத்துடன் அந்த இராணுவத்துக்கு பாரிய செலவீனங்களை தொடர்ந்து செய்யவேண்டியிருக்கும். பணத்தை விரயம் செய்ய வேண்டியிருக்கும்.
மாறாக உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துக்கான திட்டத்தை முன்னெடுக்க முடியாது.
இந்த நிலையில் தமிழர்கள் முஸ்லிம்கள் உட்பட்ட அனைவரையும் இலங்கையர்களாக அங்கீகரித்தால் மாத்திரமே இலங்கை எமது வீடு என்று கூற முடியும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.