வடமாகாண ஆளுநர் செயலகம் முன் உணவு தவிர்ப்பு போராட்டம்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2019, 2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இம் மாதம் 06ம் திகதி முதல் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களினுடைய உறவினர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.

“உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளை விடுதலை செய்”, “சிறு பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறையில் சிதைத்து விடாதே”, “பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு” போன்ற வாசகங்களடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கிப் பிடித்திருந்தமை அவதானிக்க கூடியவாறு இருந்தது.