வவுனியாவில் போதையை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகள் விற்பனை.

வவுனியா மாவட்டத்தில் அதிக அளவில் உட்கொண்டால் போதையை ஏற்படுத்தக் கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை செய்வதாகவும் சில மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சிட்டை இல்லாமல் அவர்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மருந்தகங்களில் 25 ரூபாய் பெறுமதியான குறித்த வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இல்லாமல் வழங்குவதாயின் அதனை 700 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவர்கள் சிலரும் இந்த மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்து மொத்த விற்பனை நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மருத்துவர் மற்றும் வவுனியாவை சேர்ந்த மருத்துவர் ஆகிய இருவரும் பெருந்தொகையாக வலி நிவாரணி மாத்திரைகளை கொள்வனவு செய்திருந்தமை தொடர்பில் வவுனியா சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான  நிலையில் சில வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்ளும் போது அவை போதையை தர கூடியவை என்பதனால் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி உட்கொள்வது உயிராபத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

அதேசமயம் இந்த மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இன்றி மருந்தகங்களில் விற்பனை செய்வது சட்டவிரோதமானதுமாகும்.

இதேவேளை, அண்மைக்காலமாக வவுனியா மாவட்டத்தில் இளையோரிடையே போதைப் பழக்கம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.