விடுதலை படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது.
போராளி குழு தலைவர் விஜய் சேதுபதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் காட்டு வழியாக நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படுகிறார். பொலிசாக வரும் சூரியையும் ,காட்டு பாதையை நன்கு – அறிந்தவர் என்பதால் உடன் அனுப்புகிறார்கள்.
வழியில் பொலிசாரிடம், ஆசிரியர் பணி, அரசியல், அதிகாரிகளின் சூழ்ச்சி, அப்பாவி மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகளை எதிர்த்து ஆரம் பிக்கப்பட்ட மக்கள் இயக்கம் என பல தடங்களை கடந்து மக்களுக்காக குரல் கொடுக்கும் மாபெரும் போராளியாக உருவெடுத்த தனது கதையை விஜய் சேதுபதி சொல்கிறார்.
அரசாங்கமும், செல்வந்தர்களும் மக்களுக்கு எதிராக எப்படி செயல்பட்டார்கள் என்பதையும் விவரிக் கிறார்.
விஜய் சேதுபதியால் அதிகாரத்தையும், அரசாங்கத்தையும் எதிர்க்க முடிந்ததா? அவருடைய முடிவு என்ன? விஜய் சேதுபதியின் கதையை கேட்ட சூரி யார் பக்கம் நின்றார்? என்பது மீதி கதை..
எளிய மனிதர்களின் வாழ்வியலை திரையில் துல்லியமாக கடத்தும் விஜய்சேதுபதி பெருமாள் வாத்தியார் கேரக்டரில் தன்னை மிக அழகாக பொருத்தி கொண்டு பண்ணும் திரை சாகசம் அருமை. தொழிலாளியாக ஓங்கி குரல் கொடுப்பது, காதலியிடம் பட்டும் படாமல் காதலை சொல்வது,
தோழர்கள் மடியும்போது புழுவாய் தவிப்பது, பொதுவுடைமையின் சித்தாந்தத்தை புரியும் விதமாக பாடம் எடுப்பது என ஒவ்வொரு காட்சியிலும் அசத் துகிறார்.

சூரி தனக்குள் இருக்கும் நகைச்சுவையை மறைத்து மேலதிகாரியின் கட்டளைகளை கேட்டும், கேட்காதவர்போல் ஆற்றாமையை, ஆதங்கத்தை கொட்டும்போது நடிப்பின் உச்சம் தொடுகிறார். இறுதிக் காட்சியில் அவர் எடுக்கும் முடிவு அனைத்து அநீதிக்கும் நியாயம் தேடுவது போல் இருக்கிறது. மஞ்சு வாரியர் நேர்த்தியான நடிப்பால் மனதில் நிறைகிறார். எதற்கும் கலங்காத அவர் கணவனின் பிரிவை தாங்க முடியாமல் அழும்போது பரிதாபத்தை
அள்ளுகிறார்.
போராட்ட களத்துக்கு நடுவில் விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர் இருவரிடையே மலரும் காதல் சிலிர்க்க வைக்கிறது.
கவுதம் மேனன், சேத்தன், அருள்தாஸ், வின் சென்ட் அசோகன், தமிழ், போஸ் வெங்கட் என அனைவரும் எதிர்மறை கதாபாத்திரத்தில் எகிறி அடித்துள்ளார்கள்.
கிஷோர், இளவரசு, ராஜீவ்மேனன், சரவண சுப் பையா, பாலாஜி சக்திவேல், கென் என அனைவரும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார்கள்.
கரும்பு ஆலை, நெல் வயல்கள், பனி படர்ந்த மலைகள் என கதைக்களத்தை கண்முன் நிறுத்து கிறது வேல்ராஜ் கேமரா.
இளையராஜா இசையில் தினம் தினம் பாடலை கேட்கலாம். பின்னணி இசையில் தியேட்டர் அதிர் கிறது.

ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் பலகீனம். அதிகாரத்தை நியாய கூண்டில் ஏற்றி கேள்வி கேட்கும் ஒவ்வொரு வசனங்களும் படத்தின் ஆகச் சிறந்த பலம்.
தொழிலாளர் வர்க்கம் எப்படி வஞ்சிக்கப்படுகிறது. நியாயத்துக்காக போராடியவர்களின் தியாகம், போராளிகள் பக்கம் உள்ள நியாயத்தை அரசாங்கம் எப்படி மாற்றி எழுதுகிறது என ஒவ்வொரு அம்சங்களையும் நுணுக்கமாக அலசி அதை பிரசார மேடை யாக மாற்றாமல் வெகுஜன சினிமாவாக கொடுத்து மீண்டும் தன் ஆளுமையை நிரூபித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.