விரைவில் நடத்துநர் இல்லாமல் பேருந்து இயக்கப்படும் நடைமுறை.

பேருந்து பயணச் சீட்டுகளை வழங்குவதற்கான புதிய தானியங்கி முறைமையை அறிமுகப்படுத்தும் யோசனைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அனுமதியளித்ததாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணத்தை நிர்ணயம் செய்ய புதிய இலத்திரனியல் பணப்பை (Digital wallet) முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பயணிகள் அனைவரும் தங்களின் வரவு அல்லது கடன் அட்டை மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தக்கூடிய வங்கியிலிருந்து ஓர் இலத்திரனியல் பணப்பை அறிமுகப்படுத்தப்படும்.

இடங்களை அறிய, பேருந்துகளில் ஜிபிஎஸ் அமைப்பை அணுகும் திறன் கொண்ட புதிய மின்னணு சாதனங்கள் பொருத்தப்படும்.

பணம் செலுத்துவதற்கு, பயணிகள் தங்களது ஏறும், இறங்கும் வழிகளில் பொருத்தப்படும் புதிய சாதனங்களில் தங்கள் கடன் அல்லது வரவு அட்டைகளை வைக்க வேண்டும்.

நடத்துநர் இல்லாமல் பேருந்து இயக்கப்படும். குறித்த பேருந்துகளின் பின் கதவு மூடப்படும்.

பயணிகளிடம் வங்கி அட்டைகள் இல்லை என்றால், தமது பேருந்து கட்டணத்தை பணமாக செலுத்தி, ஓட்டுனர் அருகில் உள்ள பெட்டியில் வைப்புச் செய்யலாம். பேருந்து கட்டணம் உரிய பயணக் கட்டணத்துக்கு கிட்டிய கட்டணமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பேருந்து உரிமையாளரின் அனுமதியுடன், சாரதிக்கு உதவியாக ஒரு உதவியாளரை பணியமர்த்த முடியும் என்று கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய சாதனங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு, இலங்கை மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.