தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27ஆம் திகதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. விக்கிரவாண்டியில் நடைபெறும் இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கைகளும் இந்த மாநாட்டில் தான் அறிவிக்கப்பட உள்ளது.
இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் இந்த மாநாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இதையொட்டி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் தொண்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி வருகிறது.
எந்த சூழ்நிலையிலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விஜய் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேரையாவது அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்டம், வட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாநாட்டுக்கு தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, மீண்டும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பதிவெண் விபரங்களை கட்சி தலைமை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில், மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி மாநாட்டு பந்தல் கால் நடும் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதன்படி நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது.
இதில் விஜய் பங்கேற்க இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும், மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.