வெளிநாட்டில் இலங்கையர்கள் 10 பேர் கைது

கடந்த 12ம் திகதி இரவு 10:00 மணியளவில் அஜர்பைஜானின் புசுலியில் உள்ள போயுக் பெஹ்மென்லி கிராமத்திற்கு அருகிலுள்ள எல்லையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது  இலங்கையர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஈரான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. கோரடிஸ் எல்லை முகாமில் உள்ள அஜர்பைஜான் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர்கள் சுற்றுலாப் பயணிகளாக சட்டப்பூர்வமாக அஜர்பைஜானுக்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பின்னர், அலி ஸார் என்ற ஈரான் பிரஜையுடன் எல்லை தாண்டி ஈரானுக்குள் நுழைய திட்டமிட்டனர். அதன் பின்னர் ஈரானைக் கடந்து துருக்கிக்குள் பிரவேசித்து அதன் ஊடாக ஐரோப்பிய நாடு ஒன்றிற்குள் பிரவேசிப்பதே இந்தக் குழுவின் இலக்கு என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், அஜர்பைஜான் வழியாக இந்த தரை வழிகள் வழியாக ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்வது பிரபலமடைந்ததால், அஜர்பைஜானின் எல்லைப் பாதுகாப்புப் படைகள் தங்கள் எல்லைகளை சட்டவிரோதமாக கடக்கும் புலம்பெயர்ந்தோரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.