வெளிநாட்டு வேலை ஆசைக் காட்டி மோசடி – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் 1,150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனாரத்யாப்பா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

“2021ஆம் ஆண்டில், வெளிநாட்டு வேலைகளுக்காக மோசடியாகப் பணம் பெற்றுக்கொண்டதாக 552 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது 2022ஆம் ஆண்டில் 1,337ஆக அதிகரித்துள்ளது.

துரதிஷ்டவசமாக, இந்த ஆண்டு 5 மாதங்களுக்குள், பணியகத்திற்கு ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளமை வருத்தமளிக்கிறது.இது தொடர்பான பகுப்பாய்வில், மக்கள் மிக விரைவாக ஏமாற்றப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

மக்களை ஏமாற்றி அவர்களுக்கு வெளிநாட்டு வேலைக்கான ஆசைக் காட்டுகின்றனர். இதற்காக, சில மோசடியான நபர்கள் செயற்படுகின்றார்.

ஏமாற்றப்படும் மக்களிடம் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.