கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது “மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே சீரழிக்காதே எமது சமூகத்தை சீரழிக்காதே” என பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை மேற்கொண்டிந்தார்கள்.
போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நிமால் வருகை தந்து போராட்டக்காரர்களின் கருத்துக்களை செவிமடுத்ததுடன், இனி இது போன்ற பிரச்சனைகள் இடம் பெறாது என உறுதிமொழியளித்த பின்னர் போராட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றார்கள்.
இதன் போது போராட்டத்தை மேற்கொண்டு இருந்த பெண்கள் கருத்து தெரிவிக்கும் போது, கர்ப்பிணி தாய்மார்களுடன் மிக மோசமான வார்த்தை பிரயோகங்கள் பாவிப்பது தாதியர்களுடன் முரண்படுவது, தாதியுடன் முரண்பட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலை முயற்சிக்கு தள்ளுதல் போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.