ஹிக்கடுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி.

ஹிக்கடுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஹிக்கடுவை – திராணகம பிரதேசத்தில் இன்று (31) காலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாதோரால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக T -56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

காலி மேல் நீதிமன்றில் குற்ற வழக்கு ஒன்றுக்காக முன்னிலையாவதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிழந்தவர்கள் ஹிக்கடுவை- கலுபே பகுதியைச் சேர்ந்த 47 மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இரண்டு பேரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் ஹிக்கடுவை பகுதியில் ‘கடா ரொஷான்’ எனப்படும் திட்டமிடப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பாதாள குழு உறுப்பினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் உயிரிழந்தவர்கள் பல மனிதப் படுகொலை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், அவை தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.