அமெரிக்காவின் தென்பகுதியில் ‘பெரில்’ புயல் காரணமாக குறைந்தது எட்டுப் பேர் மாண்டு விட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் காரணமாகப் பல மரங்கள் வேருடன் சாய்ந்ததுடன் வெள்ளம் கரைபுரண்டோடியது.
இந்நிலையில், புயலின் சீற்றம் சற்று குறைந்திருப்பதாக நேற்று ஜூலை 9ஆம் தேதியன்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
இருப்பினும், புயல் காரணமாக மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
டெக்சஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரில் மில்லியன்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தெரியவந்துள்ளது.
கடும் வெப்பத்தில் அவர்கள் அவதிப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மெக்சிகோ வளைகுடாவில் மையம் கொண்டு அமெரிக்கா நோக்கி விரைந்த ‘பெரில்’ புயல் ஜூலை 8ஆம் தேதி காலை டெக்சஸ் மாநிலத்தில் கரையைக் கடந்தது.
இதில் குறைந்தது ஏழு பேர் மாண்டதாகவும் பக்கத்து மாநிலமான லுவிசியானாவில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.