நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களம்காண்பதற்கு முன்னரே, அதிலிருந்து தான் விலகியதற்கான காரணம் குறித்து மனம் திறந்திருக்கிறார்.
சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையின் 25-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலர் கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் டாக்டர் ரவிச்சந்திரனைக் குறிப்பிட்டு, அரசியலிலிருந்து விலகியதற்கான காரணத்தை விளக்கிய ரஜினிகாந்த், `அரசியல்ல நான் இறங்கணும்னு முடிவெடுத்தப்போ எதிர்பாராதவிதமா கொரோனா வந்திருச்சு. இரண்டாவது அலையும் ஸ்டார்ட் ஆயிருச்சு. அரசியலில் நான் ஈடுபட்டுட்டேன் என்றால் அதிலிருந்து பின்னால போக முடியாது.
இதை நான் டாக்டர்கிட்ட சொன்னேன். அதுக்குகண்டிப்பா நான் உங்கள அனுமதிக்கிறேன். ஆனா அப்படி நீங்க போகணும்னா பிரசாரத்துக்குப் போகும்போது மாஸ்க் போட்டுட்டுதான் போகணும், 10 அடி தள்ளிதான் போகணும்னு’ அவர் சொன்னார்.
ஆனா நான் வேன் ஏறினாலே ஃபர்ஸ்ட் மாஸ்க் எடுனு சொல்லுவாங்க. கூட்டத்திலிருந்து பத்தடி தள்ளி இருக்கிறதுக்கு சான்ஸே கிடையாது. எப்படி செய்ய முடியும். இத எப்படி வெளியே சொல்றது.
சொன்னா அரசியலுக்கு பயந்துட்டேன்னு சொல்லுவாங்க. இப்படி எல்லாம் இருக்குன்னு அவர்கிட்ட சொன்னேன். `அதுக்கெல்லாம் நீங்க பயப்பட வேண்டாம். எந்த மீடியா கூப்பிட்டாலும் நான் வந்து சொல்றேன், ரசிகர்களிடம் நான் சொல்றேன். ஒன்னும் பயப்பட வேணாம். நாம ஒன்னும் பொய் சொல்லல’னு டாக்டர் சொன்னாரு. அதுக்கப்புறம் தான் வெளிப்படையா அரசியலுக்கு வரலன்னு இந்தக் காரணங்களைச் சொன்னேன்” என்றார்.