மன்னார் வளைகுடா கடற்கரையில், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டியூப் கணவாய் மீன்களின் பருவகாலம் தொடங்கியுள்ளது.
வளைகுடா கடல் பிராந்தியத்தில் மீன் பிடிக்க சென்ற கடற்றொழிலாளர்களுக்கு அதிகளவில் கணவாய் மீன்கள் கிடைப்பதால் கடற்றொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் மன்னார் வளைகுடா பகுதிக்கு சென்றிருந்தார்கள்.
இந்த நிலையிலே ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் டியூப் கணவாய் மீன்கள் சிக்கியுள்ளது.
சைக்கிள் டியூப் போன்று இருப்பதால் இதை டியூப் கணவாய் என்று கடற்றொழிலாளர்கள் அழைக்கின்றார்கள்.
இது கனவாய் வகையில் ஒரு வகைப்படும்.
1அடி நீளம் வரையில் இருக்கும் இதற்கு ஊசி கணவாய் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இந்த கணவாய் மீன்கள் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும்.
இது தவிர இந்த கணவாய் மீன்கள் பெரிய வகை மீன்களிடம் இருந்து தப்பிக்க கருப்பு நிறத்தில் திரவம் ஒன்று வெளியிட்டு, எதிரிகளிடம் இருந்து தப்பித்து செல்லும் தன்மையுடையது.
உணவுக்காக மட்டும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்ற இந்த கணவாய், தற்போது ஒரு கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த கணவாய்கள் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வியாபாரிகள் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.