மும்பை : இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் கப்பலில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டபோது விபத்து. இதில் மாலுமி ஒருவரை காணவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், இதன் காரணமாக கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பின்னரும் அதனை நிமிர்த்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மாலுமியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் இருந்த மற்ற அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடற்படை தளத்தில் இருந்த மற்ற கப்பல்களின் உதவியுடன் திங்கட்கிழமை காலை தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது. பின்னர் தீயின் சேதத்தை அறிவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில்தான் திங்கட்கிழமை மதியம் முதல் கப்பல் ஒரு பக்கமாக (துறைமுகத்தின் பக்கமாக) சாய்ந்துள்ளது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அதை நிலையாக நிறுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது.
ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா: கடந்த 2000-மாவது ஆண்டில் இந்த கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் இது.
இதில் 40 அதிகாரிகள் மற்றும் 330 மாலுமிகள் பணியில் உள்ளனர். 125 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் மீடியம் ரேஞ், குளோஸ் ரேஞ், ஆன்டி-ஏர்கிராப்ட் துப்பாக்கிகள், கடற்பரப்பில் இருந்து வானுக்கும், பரப்புக்கும் ஏவுகணையை ஏவ முடியும்.
இதில் போரின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் அதிக சென்சார்களைக் கொண்டுள்ளது. ஹெலிகாப்டர்களையும் இதிலிருந்து இயக்க முடியும்.