உலக சுகாதார ஒழுங்கமைப்பு அங்கத்துவ நாடுகளினால் 1987ஆம் ஆண்டு இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.
“புகையிலைத் தொழில் குறுக்கீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்” என்ற தொனிப்பொருளில் இந்த வருடத்திற்கான புகையிலை எதிர்ப்பு நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டு 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் எத்தனை வீதமானோர் இந்த தினத்தின் மையப் பொருளை விளங்கி செயற்படுகின்றார்கள் என்பது இன்றும் கேள்விக்குறியாகத் தான் இருக்கின்றது.
புகையிலை உற்பத்திப் பொருட்களைப் பாவிப்பதன் மூலம் மனிதனின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளால் குறைவடைவதாகவும், புகையிலை தொடர்பான நோய்களினால் ஆண்டுதோறும் சுமார் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
2030ஆம் ஆண்டளவில் புகையிலைப் பாவனையினால் உலகில் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றாக நிறுத்துவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமீப காலமாக பெரியவர்களை விட சிறுவர்களே அதிகளவில் புகைப்பிடித்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 13-15 வயதிற்கிடைப்பட்ட 37 மில்லியன் சிறுவர்கள் புகைபிடித்தலில் ஈடுபட்டுள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் மாத்திரம் 11.5 % ஆண்களும் 10.1% பெண்களும் புகைபிடித்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில் சிகரெட் பாவனையினால் நாளாந்தம் 50 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிகளவான பாடசாலை மாணவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர், வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 5.7 சதவீதமானோர் நாளொன்றிற்கு ஒரு முறையாவது புகைபிடிப்பதாகவும் அதில் 3.7 சதவீதமான மாணவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு இரசாயனங்கள் கலந்து இருப்பதானால் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஈ-சிகரெட் பயன்பாடு அதிகரித்துள்ளதாவும் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் சட்டபூர்வமாக விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளின் விலை 127 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் இதனால் வருடமொன்றிற்கு 3-4 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் இலங்கை புகையிலை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சட்டவிரோத சிகரெட்டுகளின் பயன்பாடு கடந்த வருடத்தில் 67 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் இதனால் அரசாங்கத்திற்கு 79 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கவனங்களை ஈர்க்கும் வகையிலான விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்படுவதனாலேயே சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் புகைபிடித்தல் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.
புகைபிடிக்கும் தருணங்களில் புகையை இழுத்த 10 விநாடிகளில் புகையிலையிலுள்ள நிகோட்டின் எனப்படும் இரசாயனம் மூளையைச் சென்றடைந்து இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி அமைதியாகவும் அதிக கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது.
நாளடைவில் மூளை உடலில் இயற்கையாகவே உள்ள இரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்படுகின்றது.
இதன்பின்னர் இயல்பாக உணர்வதற்கே புகைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
புகைபிடித்தல் என்பது புகைபிடிப்பவர்களை விட அவர்களைச் சுற்றி இருக்கும் ஏனையவர்களையே அதிகளவு பாதிக்கின்றது.
புகைபிடிப்பவர்கள் தமது ஆயுட்காலம் நிறைவடையும் முன்னரே தாமாக முன்வந்து தமது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.
தன்னுயிரை மாய்த்துக் கொள்ளவதற்கே இந்த உலகில் அனுமதி இல்லாத போது தன் சுயநலத்திற்காக ஏனையவர்களின் உயிரை அழிப்பதற்கு அவர்கள் காரணமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?
சற்று சிந்திப்போம்..