இரணைமடுக் குளத்தில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி (Kilinochchi) – இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி கற்று வரும் முறிகண்டி – வசந்தநகர் பகுதியில் வசிக்கும் செல்வரத்தினம் ருஷாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சிவறுனை தேடும் பணியில் இரணைமடு கடற்றொழிலாளர்களும், பிரதேச மக்களும் நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில் நேற்று மீட்க முடியாது போயுள்ளது.

மேலும், இன்று மீண்டும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

அதேவேளை, சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.