இலங்கையின் மூத்த இலக்கிய படைப்பாளி காலமானார்.

இலங்கையின் மூத்த எழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) தமது 88 ஆவது வயதில் காலமானார்.

இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1960களில் எழுத ஆரம்பித்து எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக அவர் திகழ்ந்தார்.

சந்தனசாமி ஜோசப், 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி இலங்கையின் மலையகத்தில், பதுளை மாவட்டம், ஹாலி-எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார்.

தெளிவத்தை ஜோசப் தமிழ்நாட்டில் கும்பகோணத்தின் உயர்நிலைப் பள்ளியில் கற்றதன் பின்னர், இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.

தமது படைப்புக்களுக்காக அவருக்கு சாகித்திய விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2013), சாகித்திய ரத்னா (2014) போன்ற விருதுகள் கிடைத்துள்ளன.

“காலங்கள் சாவதில்லை” என்பது இவருடைய முக்கியமான நாவலாகும்.

“நாமிருக்கும் நாடே” சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது இவருக்கு கிடைத்தது.

இவரது “குடை நிழல்” என்ற புதின நூல், 2010 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவையின் விருதைப் பெற்றுள்ளது.