ஈரானுக்கு பதில் வழங்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை!

இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 180 ஏவுகணைகளை ஏவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
 
இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீதும் டெல்அவிவ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
இஸ்ரேலின் முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளை நோக்கிக் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
 
காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களுக்கும், ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டமைக்கும் பதிலளிக்கும் வகையில் இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் பெரிய தவறொன்றை செய்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கு பதில் வழங்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
 
அதேநேரம், ஈரான் இதுவரையில் ‘உரிய வகையில் பாடம் கற்கவில்லை” எனவும் ‘இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துபவர்கள் பெரும் நட்டத்தை எதிர்கொள்வார்கள்” எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் ஈரான் சிவப்பு எல்லையை கடந்து விட்டதாகவும், இஸ்ரேல் அமைதியாக இருக்காது எனவும் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
 
அதேநேரம், ஈரானின் தாக்குதலின் போது இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு தங்களது தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கியதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அத்துடன் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு எதிராக ஈரானுக்கு கடுமையான செய்தி ஒன்றை அமெரிக்கா அனுப்ப வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சி வலியுறுத்தியுள்ளது.
 
அதேநேரம் இந்த விடயத்தில் இஸ்ரேலுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
ஈரானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
 
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், உடனடி போர் நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
 
இவ்வாறான பின்னணியில் நாளைய தினம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.