உரத்தை பொறுப்பேற்ற பின் பதவி விலகுவதாக அமரவீர அறிவிப்பு

விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நேற்று (09) இலங்கை வந்தடைந்த யூரியா உரத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சர் இன்று (10) காலை பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்ட யூரியா உரத் தொகுதி இன்று உத்தியோகப்பூர்வமாக அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த செயற்பாடு இன்று முற்பகல் 10 மணியளவில் இலங்கை துறைமுக அதிகார சபையின் ஈ.சி.டீ. இரண்டாம் இலக்க முனையத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் இந்த சந்தர்ப்பத்தில் இணையவுள்ளனர்.

இந்திய கடன் திட்டத்தின்கீழ், 40,000 மெற்றிக் டன் யூரியா உரம் தாங்கிய கப்பல், நேற்று முற்பகல் நாட்டை வந்தடைந்தது. அந்த உரத்தை தரையிறக்கும் பணி நேற்றைய தினம் இடம்பெற்றது.

மூன்று சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களினால் குறித்த உரத்தின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஓமானில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள குறித்த உரத்தின் மாதிரிகளை, தேசிய தாவரக் காப்பு சேவை நிறுவனத்திற்கு அனுப்பி, தரப்பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த 65 ஆயிரம் மெற்றிக் டன் உரத்தில் 30 ஆயிரம் மெற்றிக் டன் நெல் உற்பத்திக்காக வழங்கப்படவுள்ளதோடு 20 ஆயிரம் மெற்றிக் டன் சோளப் பயிர்ச் செய்கைக்காகவும் எஞ்சியவை தேயிலை உற்பத்திக்காகவும் வழங்கப்படவுள்ளது.