போர்க்காலப் பகுதியில் தமிழ் – சிங்கள ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தின் செய்தியாளராக பணியாற்றிய ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, கைது செய்யப்பட்டவர், போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நோர்த்தம்டன்ஷெயார் (Northamptonshire) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2000ஆம் ஆண்டு இலங்கையில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொல்லப்பட்ட வழக்கில் 49 வயதான நபரை கடந்த வருடம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இனப்படுகொலை, மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை உள்ளடக்கிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டபோதும், அவர் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என்றும் மெட்ரோபொலிட்டன் பொலிஸாரை கோடிட்டு நொதம்டன்ஷெயார் டெலிகிராப் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் நிமலராஜன், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு கொல்லப்பட்டுள்ளார். இதன்போது துப்பாக்கிதாரிகள் அவரது தந்தையைக் கத்தியால் தாக்கினர்.
வீட்டில் இருந்த ஏனைய குடும்ப உறுப்பினர்களைக் காயப்படுத்தியுள்ளனர். நிமலராஜன் இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் மொழி சேவைகளுக்காக பணியாற்றினார் மற்றும் நாட்டின் பொதுத் தேர்தலைச் சீர்குலைத்த வன்முறைகள் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
தமிழ்ப் போராளிக் குழுவொன்று மனித உரிமை மீறல்கள் மற்றும் வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மரணத்திற்குப் பிறகு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், 2017ஆம் ஆண்டில் நோர்த்தம்டன்ஷெயார் பெருநகர பொலிஸார் கொலை தொடர்பாக ஒரு பரிந்துரையைப் பெற்று விசாரணையை ஆரம்பித்தது.
நிமலராஜனின் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நோர்த்தாம்டன்ஷையரில் வசிப்பதாகக் கூறப்படுபவரின் தகவல்களின் ஆவணமும் 2020 இல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை இந்த விசாரணையின் புலனாய்வுக்கு உதவக்கூடிய, குறிப்பாக பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து தற்போது வசிக்கும் இலங்கை சமூகத்தின் உறுப்பினர்கள் எவரும் தகவல்களைக் கொண்டிருந்தால், அவற்றைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக நோர்த்தம்டன்ஷெயார் பொலிஸார் அறிவித்துள்ளனர்.