ஒரு மருத்துவரும், தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்!

சமூக வலைத்தளங்களின் காலத்தில், யுடியுப்களின் காலத்தில் ஒருபுறம் செய்திக்கும் வதந்திக்கும் இடையிலான வித்தியாசம் சுருங்கிகொண்டே போகிறது. இன்னொருபுறம் ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ருசுப்படுத்தத் தேவையான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன, மக்கள் மயப்பட்டுள்ளன.

உண்மையை உறுதிப்படுத்தத் தேவையான வாய்ப்புகள் அதிகம் மக்கள் மயப்பட் டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,வதந்தியை விட உண்மை அதிகம் ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. ஏன் ?

ஏனென்றால், சமூக வலைத்தளங்களும் யு டியுப்களும் அதிகமதிகம் பொதுப் புத்திக்கு கிட்டே வருகின்றன.பொதுப் புத்தியானது எப்பொழுதும் விஞ்ஞான பூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. எனவே பொதுப் புத்தியை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் யுடியுப்களிகளும் சமூகவலைத்தளங்களும் சுடச்சுட செய்திகளை வழங்கும்.

இது பாரம்பரிய ஊடகத்துறையில் இருக்கும் தணிக்கை,சுய தணிக்கை, சமூகப் பொறுப்பு எல்லாவற்றையுமே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்து கூறும் சுதந்திரத்தை தகவல் புரட்சி வழங்கியிருக்கிறது. இதனால் இணைய இணைப்பு இருந்தால் யாரும் எதையும் கூறலாம் என்ற நிலை தோன்றுவிட்டது.

தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிக் கருத்துக்கூறும் சுதந்திரம் ஆபத்தானது.

அது நிபுணர்களை சமூக வலைத்தளங்களில் இருந்தும் சமூக ஊடகங்களில் இருந்தும் வெளித்தள்ளுகின்றது.நிபுணர்களும் துறை சார்ந்த வல்லுநர்களும் சமூக வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அமைதியாக விலகிச் செல்கிறார்கள்.அந்த வெற்றிடத்தை மந்தர்கள் நிரப்புகிறார்கள்.

ஊடகங்களுக்கு குறிப்பாக சமூக வலைத்தள ஊடகங்களுக்கு சர்ச்சைகள் தேவை. அவை செய்திப் பசியோடு காத்திருக்கின்றன.அதனால் அவை சர்ச்சைகளைத் தேடித் திரிகின்றன.

இவ்வாறு சர்ச்சைகளுக்காகக் காத்திருக்கின்ற, சர்ச்சைகளை சுடச்சுட பரிமாறுகின்ற ஒரு சமூக ஊடகச் சூழலுக்குள் ஒரு மருத்துவர் நேரலையில் தோன்றினார். அவர் அவ்வாறு தோன்றியதே ஒரு சர்ச்சை. ஏனென்றால் தமிழ் சமூகத்தில் மருத்துவர்கள் தங்களுக்கு என்று பவித்திரமான ஒரு ஸ்தானத்தை எப்பொழுதும் பாதுகாத்துக் கொள்வார்கள்.அந்த பவித்திரமான ஸ்தானத்தை விட்டு வெளியே வருவது குறைவு.

விதிவிலக்காக சாவகச்சேரி ஆஸ்பத்திரியின் முன்னாள் அத்தியட்சகர் மருத்துவர் அர்ஜுனா மற்றும் கண்டாவளையில் ஒரு பெண் மருத்துவர் போன்றவர்கள் சர்ச்சைகளுக்குள் வருகிறார்கள். சமூக ஊடகங்களில் அதிகம் “வைரல்” ஆகிறார்கள்.

மருத்துவர் அர்ஜுனா ஒரு நேரலைப் பிரியர் என்று தெரிகிறது. அவர் எப்பொழுதும் நேரலையில் தோன்றுகிறார்.தன்னுடைய எல்லா விவகாரங்களையும் மக்களுக்கு நேரடியாக சமர்ப்பிக்கின்றார். அதில் ஓர் அப்பாவித்தனம் உண்டு. சாகச உணர்வு உண்டு.தன்னை கதாநாயகனாக கட்டிஎழுப்பும் ஆசையுண்டு.ஒரு மருத்துவர் அப்படி நேரலையில் தோன்றுவது தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை வித்தியாசமானது. அதனால் அர்ஜுனா வைரல் ஆனார்.

அர்ஜுனா ஒரு ஆஸ்பத்திரியின் அத்தியட்சகராக இருந்தவர் என்ற அடிப்படையில்,தான் வேலை செய்த சிஸ்டத்துக்குள் இருந்த குளறுபடிகளை வெளியே கொண்டு வருகிறார்.

அவர் சிஸ்டத்தை அம்பலப்படுத்துகின்றார். உள் வீட்டு விஷயங்களை அவர் வெளியே கொட்டக்கொட்ட அவருக்கு ஆதரவு பெருகியது. அவருடைய முகநூல் கணக்கைத் தொடர்வோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எப்பொழுது தாண்டி விட்டது. அவரும் அதை ரசிக்கிறார். அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றார்.

அவர் ஒரு விதிவிலக்கு. தான் வேலை செய்யும் சிஸ்டத்தையே பகிரங்கமாக விமர்சித்தது, அதிலும் பேர் சொல்லி விமர்சித்தது, அதனால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தொடர்ச்சியாக நேரலையில் நிற்பது, மக்களை சிஸ்டத்துக்கு எதிராகத் திரளச் செய்தது….போன்ற பல விடயங்களிலும் அவர் வழமையான மருத்துவர்களுக்குள்ள குணத்தோடு இல்லை. விதிவிலக்காகக் காணப்படுகிறார்.

அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் பாரதூரமானவை. அவர் முன்வைக்கும் விமர்சனங்களும் பாரதூரமானவை. உயிர்களோடு தொடர்புடையவை, ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை, மருத்துவத்துறை சார் பொறுப்புக் கூறலோடு தொடர்புடையவை.

அந்தக் கேள்விகள் சரியா பிழையா என்று இக்கட்டுரை ஆராயப் போவதில்லை. ஆனால் மருத்துவத் துறை சார் பொறுப்பு மிக்கவர்கள் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் இதுவரையிலும் பதில் சொல்லவில்லை.

அர்ஜூனா செய்வது சரியா பிழையா என்பதுவும் தனியாக விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அவர் ஒரு கலகத்தைத் தொடக்கி விட்டார். அந்த கலகம் மக்களைக் கவர்ந்திருக்கிறது. மக்களை வீதிக்குக் கொண்டு வந்திருக்கிறது. சாதகச்சேரி ஆஸ்பத்திரிக்கு முன் திரண்ட மக்களின் எண்ணிக்கையானது சில நாட்களுக்கு முன் யாப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானது.

மக்கள் ஏன் அவ்வாறு திரண்டார்கள்?அர்ஜுனாவை நம்பித் திரண்டார்களா? இல்லை. மக்கள் மத்தியில் ஏற்கனவே மருத்துவத்துறை சார்ந்து பதில் சொல்லப்படாத கேள்விகள் இருந்தன.

அச்சங்கள் இருந்தன. குறிப்பாக தனியார் மருத்துவத் துறை தொடர்பில் ஆழமான வெறுப்பு இருக்கின்றது. இவ்வாறு மக்களின் பொது மனோநிலையில் மண்டிக் கிடந்த கோபம், பயம், சந்தேகம், வெறுப்பு,கையாலாகத்தனம் போன்ற எல்லாவற்றினதும் பிரதிநிதியாக அர்ஜுனா தோன்றினார்.அதனால்தான் மக்கள் ஆஸ்பத்திரிக்கு முன் திரண்டார்கள்.

அர்ஜுனாவை எதிர்ப்பவர்கள்,அவருடைய தனிப்பட்ட சுபாவத்தை விமர்சிப்பவர்கள்,அவருடைய நடத்தைகளை விமர்சிப்பவர்கள், ஒரு விடயத்தை இங்கு தொகுத்துப் பார்க்க வேண்டும். மக்கள் வெற்றிடத்தில் இருந்து திரண்டு வரவில்லை. மக்களுடைய அடி மனதில் மண்டிக்கிடந்த வெறுப்புத்தான் சந்தேகம்தான் அவ்வாறு திரளக் காரணம்.

அதை சமூக ஊடகங்களும் யு டியுப்களும் பரவலாக்கின,பலப்படுத்தின.

அர்ஜுனாவின் கலகம் வெடித்தெழுந்த பின்னணியில் அது தொடர்பில் முதலில் கருத்துக் கூறாத மருத்துவர் சத்தியமூர்த்தி,சில நாட்கள் கழித்து ஒரு பதிவை முகநூலில் போட்டார்.

அதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் பதில் வினை ஆற்றியிருந்தார்கள்.அதில் பெருந்தொகையானவை வெறுப்பும் எதிர்ப்பும் மிக்கவை. மருத்துவர் சத்தியமூர்த்தியை ஆதரித்து, அவரைப் பாதுகாத்து வந்த குறிப்புகள் மிகக் குறைவு. இது எதைக் காட்டுகின்றது?

மருத்துவத்துறை சார்ந்து சாதாரண மக்கள் மத்தியில் சந்தேகங்களும் பயங்களும் அதிருப்தியும் உண்டு என்பதைத்தான் அது காட்டுகின்றது. தனியார் மருத்துவத் துறையின் வளர்ச்சியும் அரச மருத்துவமனைகளில் நிகழும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் மேற்கண்ட அதிருப்திகளுக்குக் காரணமாக இருக்கலாம். சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மையை விட வதந்திகள் அதிகம் பரவுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இங்கு பிரச்சனை அவையல்ல. மக்கள் மத்தியில் ஆழமான சந்தேகங்களும் கோபமும் உண்டு என்பதுதான் பிரச்சினை.அதை மருத்துவத் துறை எதிர் கொள்ள வேண்டும்.

அதற்கு பதில் கூற வேண்டும்.

அரச மருத்துவமனைகளை தமிழ் கிராம மக்கள் தர்மாஸ்பத்திரி என்று அழைப்பார்கள்.ஏனென்றால் அங்கே மருந்தும் சிகிச்சையும் தர்மமாக வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையில். ஆனால் மெய்யான பொருளில் அவை தர்மாஸ்பத்திரிகள் அல்ல. அங்கு வேலை செய்யும் எல்லாருக்குமே சம்பளம் வழங்கப்படுகிறது.

இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன. யாரும் இலவசமாகத் தொண்டு புரியவில்லை. அது மட்டுமல்ல அங்கு இலவசமாகத் தரப்படும் மருந்தும் சிகிச்சையும் கூட மக்களிடம் சேகரித்த வரிப்பணம்தான். அதாவது மக்கள் அரசாங்கத்துக்கு கொடுத்த வரிதான் இலவச சிகிச்சையாக இலவச மருந்தாக இலவச கல்வியாக திருப்பி வழங்கப்படுகிறது. மேற்கத்திய வளர்ச்சி அடைந்த முதலாளித்துவங்களில் அது நலன்புரி அரசு என்ற வெற்றிகரமான ஒரு சிஸ்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கேயோ சாதாரண மக்கள் அதனை அரசாங்கம் தங்களுக்குச் செய்யும் தர்மமாக கருதுகிறார்கள்.

இவ்வாறு அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாக கருதும் ஒரு சமூகம்,தர்மாஸ்பத்திரிகள் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தர்மமாக நடக்கவில்லை என்று கருதும் பொழுதே விமர்சனங்கள் எழுதுகின்றன.இதில் தனியார் மருத்துவத் துறை தொடர்பான விமர்சனங்களும் அடங்கும்.

அர்ஜுனாவின் கலகத்தை பொதுமக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்?

அர்ஜுனா எழுப்பிய கேள்விகள் ஏன் பொதுமக்களை ஆஸ்பத்திரிக்கு முன் கொண்டு வந்து நிறுத்தின? இந்த விடயத்தில் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் அர்ஜுனாவின் விடயத்தை விவகாரம் ஆக்கியதில் அதிகம் பங்களிப்பு செய்ததாக ஒரு அவதானிப்பு உண்டு. 

ஊடகங்களில் அந்த உள்ளூராட்சி சபை உறுப்பினரும் இடைக்கிடை தோன்றினார்.அவர் போலீசாரல் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பு நூற்றுக்கணத்தில் திரண்ட மக்களை அவர் மட்டும் அழைத்துக் கொண்டு வரவில்லை.

மாறாக மக்களிடம் ஏற்கனவே உள்ளுறைந்து காணப்பட்ட கேள்விகள்,சந்தேகங்கள்,கோபங்கள் என்பவற்றின் விளைவாகத்தான் மக்கள் அங்கே வந்தார்கள்.சமூக வலைத்தளங்களும் யு டியுப்களும் அதனை பரபரப்பாக சுடச்சுட வழங்கின. அதனால் மக்கள் வீதிக்கு வந்தார்கள்.

அதாவது மக்கள் அவ்வாறு திரளும் அளவுக்கு மக்கள் மத்தியில் விடை கிடைக்காத கேள்விகளும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் சந்தேகங்களும் தனியார் மருத்துவத்துறை தொடர்பாக பயங்களும் வெறுப்பும் உண்டு என்று பொருள்.

அர்ஜுனா அவ்வாறு ஏற்கனவே மக்கள் மத்தியில் பரவலாக காணப்பட்ட அதிருப்தி,வெறுப்பு,சந்தேகம் போன்றவற்றுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கினார்.

அப்படிப் பார்த்தால் அர்ஜுனா ஒரு சிறு கலகத்தைச் செய்திருக்கிறார்.

ஆனால்,அந்தக் கலகத்தை ஒரு சமூக மாற்றத்துக்கான தொடக்கப் பொறியாக மாற்றத் தேவையான பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் உண்டா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அவர் அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் அமைந்திருந்தது. அதில் அவர் ஏன் அடிக்கடி நேரலையில் தோன்றினார் என்பதற்கு விடை கிடைக்கின்றது. 

அந்த நேர்காணல் முழுவதிலும் அவர் தன்னுடைய முதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஒரு விளையாட்டுப் பிள்ளைபோல, சாகச உணர்வு நிரம்பியவராக, ஒரு விதத்தில் பொறுப்பற்றவராக,கருத்துக்களைத் தெரிவித்தார்.

சமூக ஊடகச் சூழலுக்குள் அளவுக்கு மிஞ்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு கலகக்காரராகவே அவர் அதில் தோன்றினார். இந்த நேர்காணல் அவர் மீதான விமர்சனங்களை பலப்படுத்தக் கூடியது. சமூக ஊடகச் சூழலில் சிலசமயம் இன்றைய செய்தி நாளைய குப்பை. அர்ஜுனா கேட்ட கேள்விகளும் அவ்வாறு நாளைக்கு குப்பை ஆகிவிடக்கூடாது.