கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்!

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு, காங்கேசன்துறை மன்னார் மற்றும் புத்தளம் வரையும், ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையும் கரைக்கு அருகில் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீற்றராக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேநேரம் குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அரபிக் கடல் பகுதியில் மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் குறித்த பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை அரபிக்கடலின் மேற்கு மத்திய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.