கனடாவிலிருந்து பொதியில் வந்த குஷ் ரக போதைப்பொருள்!

பொதிகளை அனுப்பும் நிறுவனமொன்றின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த 19 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப் பொருள் சுங்கத் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
 
மின்சாதனப் பொருள் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து அனுப்பப்பட்ட ஒரு கிலோ கிராமும் 833 கிராமும் நிறையுடைய போதைப் பொருள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
 
கனடாவிலிருந்து பிலியந்தலை பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்தே குறித்த போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மேலதிக விசாரணைகளுக்காகக் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.