கனடா ஒன்ராறியோவில் டர்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்றும் தமிழ்த் தேசிய விளையாட்டு அணிகளில் துடிப்புடன் பங்குபற்றி வந்தவர் எனவும் கூறப்படுகிறது.
அஜாக்ஸ் (Ajax) என்ற இடத்தில் உள்ள கிங்ஸ்கஸ்ரில் அருந்தகத்துக்கு (King’s Castle Bar and Grill) வெளியே வாகனத் தரிப்பிடத்தில் இருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கி விட்டு காரில் ஏறித் தப்பி சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.
கடுமையான வெட்டுக் காயங்களுடன் ரொறன்ரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். அவரை வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற நபரைப் பொலீஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
அதேசமயம் சம்பவம் இடம்பெற்ற அதே நேரத்தில் அருந்தகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் சாரதி ஒருவர் தனது காரை வேகமாகச் செலுத்தி நபர் ஒருவரை மோதிப்படுகாயப்படுத்தியவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த இரு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டர்ஹாம் பிராந்தியப் பொலீஸ் தெரிவித்துள்ளது.