கறுப்பு ஜூலைக்கு காரணமான சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளே இன்றைய நிலஅபகரிப்பு இராணுவ ஆக்கிரமிப்பிற்கும் காரணம்!

இலங்கை அரசாங்கம் நில அபகரிப்பு இராணுவ ஆக்கிரமிப்பு, பொருளாதாரீதியில் ஒதுக்கிவைத்தல், போன்றவற்றைஇன்றும்  முன்னெடுப்பதற்கு கறுப்புஜூலை கலவரத்திற்கு காரணமான அதே சிங்கள பௌத்த பெரும்பான்மை கொள்கையே காரணமாக உள்ளது என அமெரிக்காவை தளமாக கொண்ட பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சமத்துவம் மற்றும் நீதிக்கான அமைப்பு (பேர்ள் ) மேலும் தெரிவித்துள்ளது.

கறுப்பு ஜூலையின் 41வது வருடத்தினை நினைவுகூறும் இன்றைய நாளில் தமிழர்களிற்கு எதிரான திட்டமிடப்பட்ட படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதில் பேர்ள் அமைப்பு உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் இணைந்துகொள்கின்றது அவர்களிற்கு ஆதரவளிக்கின்றது.

மேலும் வன்முறைக்கான காரணமான சிங்களபேரினவாதம் நான்கு தசாப்தகாலத்திற்கு முன்னர் போன்று  தொடர்ந்தும் தற்போதைய நிகழ்வுகளில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது, தமிழர் தேசத்திற்கு தீங்குவிளைவிக்கின்து என்பதையும் ஆராய முயல்கின்றது இது குறித்து சிந்திக்கின்றது.

1948ம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் சிங்களபௌத்த பேரினவாதம்  இலங்கையின் ஆட்சி கட்டமைப்பிற்குள் மிகவேகமாக வேரூன்றியது.

தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை, தேசிய இனவாத சொல்லாடல்கள் போன்றவை, பல தமிழர் விரோத படுகொலைகளிற்கு வழிவகுத்தன.

யுத்தத்திற்கு முன்னர் இடம்பெற்ற மிகவும் ஈவிரக்கமற்ற கொடுரமான படுகொலைகளில் ஒன்றாக  கறுப்பு ஜூலை காணப்படுகின்றது.

1983ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி முதல் 30ம் திகதி வரை  அரசாங்கத்தின் உதவியுடன் வன்முறைகளில் ஈடுபட்ட சிங்கள காடையர்கள் வாக்காளர் அட்டைகளை பயன்படுத்தி, தமிழர்களின் முகவரிகளை பயன்படுத்தி, 3000 தமிழர்களை கொலை செய்தனர்,5000 வர்த்தகநிலையங்களையும்,18000 வீடுகளையும் சூறையாடினர், எரித்து தீக்கிரையாக்கினர்.

இந்த சம்பவங்களால் 90,000 முதல் 150,000 தமிழர்கள் இடம்பெயர்ந்தனர்.

இன்றும் அரசாங்கம் நில அபகரிப்பு இராணுவ ஆக்கிரமிப்பு, பொருளாதாரீதியில் ஒதுக்கிவைத்தல்,கலாச்சார ரீதியிலான ஆதிக்கம் போன்றவற்றை முன்னெடுப்பதற்கு கறுப்புஜூலை கலவரத்திற்கு காரணமான அதே சிங்கள பௌத்த பெரும்பான்மை கொள்கையே காரணமாக உள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அமைச்சரவையில் கல்விஅமைச்சராக பணியாற்றிய காலத்திலேயே கறுப்புஜூலை இடம்பெற்றது.

இந்த வருடம் தேர்தல்கள் காரணமாகவும், ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் 57 அமர்வு காரணமாகவும், சர்வதேச சமூகத்தின் செயற்பாட்டாளர்களின் உதவியுடன் நல்லிணக்கம் குறித்து விவாதங்கள் கருத்துபரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நம்பகதன்மை மிக்க உண்மையை கண்டறியும் செயற்பாட்டிற்கான  சூழ்நிலை காணப்படவில்லை என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள போதிலும்,அரசாங்கம் தனது சர்ச்சைக்குரிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.

பெரும்பான்மை சிங்களபௌத்த ஒற்றையாட்சி தேசத்தில் தேர்தல்களிற்கு பின்னர் தமிழர்கள் ஒருபோதும் மாற்றங்களை  அனுபவித்ததில்லை.

நான்கு தசாப்தங்களிற்கு பின்னரும் கறுப்புஜூலை கலவரத்தில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் தொடர்கின்றது.

இந்த அநியாயங்களிற்காக தனிநபர்களோ அல்லது இலங்கை அரசாங்கமோ  பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை.

பொறுப்புக்கூறல் இன்மை அதில் ஏற்பட்ட தோல்விகள் தமிழர்களிற்கு எதிராக மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதற்கான  துணிச்சலை இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களிற்கு வழங்கியுளளது.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் தேர்தல் தொடர்பான சொல்லாடல்களிற்கு அப்பால் தமிழ் மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பது குறித்து அக்கறையற்றதாக காணப்படுகின்றது.

பொறுப்புக்கூறல் தோல்வி ஒரு சமூகத்தை எப்படி பாதிக்கும்  ஒரு சமூகத்திற்கு எப்படி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதற்கான அப்பட்டமான நினைவூட்டல் இது.

பாதிக்கப்பட்ட -உயிர் பிழைத்த தமிழ் மக்கள் பக்கச்சார்பற்ற விசாரணைகளிற்காக சுயாதீன சர்வதேச பொறிமுறையும், நீதிவிசாரணைகளும்  அவசியம் என விடுக்கும் வேண்டுகோள்களை பேர்ள் அமைப்பு ஆதரிக்கின்றது.

நீதி பொறுப்புக்கூறல் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் ஈழமக்களின் முயற்சிகளில் பேர்ள் அமைப்பு அவர்களிற்கு ஆதரவாக உள்ளது.