கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் சடலம் ஒன்று மீட்பு.

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலங்கேணி கிராம சேவகர் பிரிவில் ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று(31) அதிகாலை 4.30 மணி அளவில் அலங்கேணி அம்மன் கோவில் அருகாமையில் இருக்கும் வீதி ஓரத்தில் இருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் உள்ள கண்டல் காட்டு பகுதியில் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த சடலம் கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய அப்துல் ரசாக் கலால்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் கடந்த 8 வருட காலமாக வேலை செய்து வந்தவர் எனவும், அப்பன்னையிலேயே இரவு நேரத்திலும் தங்குவதாகவும் அவருடன் வேலை பார்த்தவர் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பண்ணையில் அவருடன் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர் நள்ளிரவு பின்னர் அவரை காணவில்லை என வெளியில் தேடிய போது அவரது செருப்பு மாத்திரம் வீதியோரத்தில் இருந்ததை அவதானித்து மேலும் தேடியபோது வீதியிலிருந்து சுமார் பத்து மீட்டர் தூரத்தில் உள்ள கண்டல் காட்டுப் பகுதியில் இறந்த நிலையில் கிடந்ததாக விசாரனைகளின் போது குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பில் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த நபர் போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர் எனவும் 20 வருட காலமாக ஆலங்கேணி பகுதியில் இரண்டு இடங்களில் கோழி பண்ணையில் வேலை செய்து வந்தவர் எனவும் குறிப்பிடுகின்றனர்.

அவரது சகோதரர் ஒருவர் அவர் தொடர்பில் குறிப்பிடுகையில் அடிக்கடி அவருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும், குடிப்பழக்கம் இருக்கின்றது எனவும், இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளது அதில் ஒருவர் விஷேட தேவை உடையவர் எனவும்  குறிப்பிட்டிருந்தார்.

குறித்த பகுதியில் பல வருடங்களுக்கு முன்னரும் இதே போன்று ஒருவர் இறந்ததாகவும் அங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.