வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10.00 (25.10.2023) மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
குறித்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை கடந்து சென்றுள்ளார்.
சற்று நேரத்தில் சத்தம் கேட்டது. அதன் பின்னர் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடினர்.
இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணைக்கு சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவர் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மரணம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர்