வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமானது.
குறித்த போராட்டத்தில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளை தேடியும், நீதி கோரியும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2000 வது நாளான இன்று மாபெரும் போராட்டத்தினை இன்று முன்னெடுத்திருந்தனர்.
கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியானது, டிப்போ சந்தி வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதனை தொடர்ந்து நிறைவு பெற்றது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்திற்கு மகஜர் ஒன்றினையும் அவர்கள் இன்றைய தினம் அனுப்பி வைத்தனர்.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ் சிறிதரன் மற்றும் எஸ் கஜேந்திரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் இஸ்ராலின் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மத தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.