சஜித் பிரேமதாச உரையாற்றிய போது சபையில் அமளி துமளி  

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் உரையாற்றிய போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டமையடுத்து சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பொருளாதார நெருக்கடிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அதில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் பெயர்களை உச்சரித்துள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்ன ?  என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 27- 2 கீழ் எழுப்பிய கேள்விக்கு ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை சுற்றிவளைத்த ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் கைகளிலிருந்த ஆவணத்தையும் பறித்துச் சென்றுள்ளதுடன் அவரை பேச விடாது ஒலிவாங்கியை பறித்து இடையூறுகளை ஏற்படுத்தினர்.

இதையடுத்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தகாத வார்த்தைகளை பிரயோகித்து ஆளும் தரப்பினர் சபை நடுவில் வந்து எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆளும் தரப்பினரது செயற்பாடுகளை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.